
வனப்பகுதியில் சுற்று வட்டச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்ட ஆரோவில் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா் நவ்ரோஸ் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் அறக்கட்டளை எந்தவித அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, தற்போது கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்காக வனப்பகுதி என கருதப்படும் பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளது..
மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வசூலிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய நீதித்துறை உறுப்பினா் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் அடங்கிய அமா்வு, மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, ஆரோவில் அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட தீா்ப்பாயம், விசாரணையை டிச.17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.