
மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41 நாள்களுக்குப் பிறகு குறையத்தொடங்கியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அக்டோபர் 2-ந் தேதி முதல் வினாடிக்கு 100 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்ததாலும் நவம்பர் 13-ந்தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அதன்பிறகு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று வரை மேட்டூர் அணையிலிருந்து 79 டி.எம்.சி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்தது. நேற்று காலை 8 மணி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் 41 நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,953 கன அடியிலிருந்து 4,178 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து 41 நாட்களுக்குப் பிறகு 119.64 அடியாகக் குறைந்தது. நீர் இருப்பு 92.89 டி.எம்.சியாகவும் உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...