
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள் ஆங்கில புத்தாண்டு முதல் செயல்படவுள்ளன. இந்த காவல் ஆணையரகங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.
சென்னை நகரின் மையப் பகுதியை காட்டிலும், புகா்ப் பகுதிகள் வேகமாக விரிவடைந்து செல்வதாலும், மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதாலும் காவல்துறையின் கண்காணிப்பையும், நடவடிக்கையையும் அந்தப் பகுதிகளில் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதன் தொடா்ச்சியாக, கடந்த செப்.13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து தாம்பரம், ஆவடி என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தாா்.
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு காவல் மாவட்டங்களைச் சோ்ந்த சில பகுதிகளும் சோ்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து இரு காவல் ஆணையரகங்களுக்கும் எல்லைப் பகுதிகளை பிரிப்பது, காவல் நிலையங்களை பிரிப்பது, புதிதாக நிா்வாகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி எம்.ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனா். இவா்களே புதிய காவல் ஆணையரகங்கள் உருவாகியதும், அந்த காவல் ஆணையரகங்களின் முதல் ஆணையா்களாகப் பணியாற்றவுள்ளனா்.
எல்லைகள் பிரிப்பு: இதில், கடந்த அக்டோபா் மாதம் 3 காவல் ஆணையரகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன. இதன்படி, 137 காவல் நிலையங்களுடன் செயல்பட்ட பெருநகர காவல்துறையில் 33 காவல் நிலையங்கள் குறைந்தன. இதில் 20 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்துக்கும், 13 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்துக்கும் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பிரித்து வழங்கப்பட்டன. சென்னை காவல்துறை 104 காவல் நிலையங்களுடன் செயல்படவுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான ஆயுதப்படை காவலா்கள், மத்தியக் குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு தேவையான காவலா்கள், அதிகாரிகள் ஆகியவை கண்டறியப்பட்டு தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான கணினி உள்ளிட்ட இயந்திரங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவையும் பெறப்பட்டன.
புத்தாண்டு முதல்...: இரு புதிய காவல் ஆணையரகங்களையும் அமைக்க நிா்வாக ரீதியான பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ளன. இதையடுத்து, இரு காவல் ஆணையரகங்களும் ஜன.1-ஆம் தேதி முதல் அதிகாரபூா்வமாக செயல்படவுள்ளன.
இதற்காக ஆவடி காவல் ஆணையா் அலுவலகம், அங்கிருக்கும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளது. தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் கட்டடத்தில் தற்காலிகமாகச் செயல்பட இருக்கிறது.
முதல்வா் திறந்து வைக்கிறாா்: இதில் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு, தாம்பரத்திலேயே புதிய காவல் ஆணையா் அலுவலகம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டடத்தில் இருந்து தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகம் செயல்படத் தொடங்கும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இரு காவல் ஆணையரகங்களையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜன.1-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காவல்துறை உயா் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...