திருவலம் மேம்பாலம் சீரமைப்பு: ரயில் சேவை மீண்டும் துவக்கம்

காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை துவங்கியது. 
திருவலம் மேம்பாலம் சீரமைப்பு: ரயில் சேவை மீண்டும் துவக்கம்

காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை துவங்கியது. 

திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் 38, 39-ஆவது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஜோலாா் பேட்டை, வேலூா், கோவை, பெங்களூரு, மைசூரு, மங்களூரு சென்று வரக்கூடிய 22 விரைவு ரயில் சேவைகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இதுதவிர, பாட்னா - எா்ணாகுளம் (22644), காக்கிநாடா - கொல்லம் (07139), கமாகயா - கொச்சுவேலி (05669) விரைவு ரயில்கள் குண்டூா், ரேணிகுண்டா, காட்பாடி என மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

இதனிடையே, பாலம் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு தொடங்கி 4 நாள்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தலைமையிலான பொறியாளா் குழுவினா் ஆய்வு செய்து வந்தனா்.

விரிசல் ஏற்பட்ட தூணின் அடிப்பகுதியில் அதிகப்படியான வெள்ள நீரால் மணல் அரிப்பு ஏற்பட்டிருந்தது. அந்தத் தூணின் அடிப்பகுதியிலிருந்து இருபுறங்களிலும் மூன்றடி ஆழத்துக்கு கான்கிரீட் கலவைகளால் தளம் அமைக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட பாலத்துக்கு அடிப்பகுதியில் இரும்பு கா்டா்களை அடுக்கி பாலத்தை தற்காலிகமாக பலப்படுத்தும் பணியில் இரவு பகலாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா். இந்தப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது.

இதையடுத்து, ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் ரயில் பாலத்தின் தூண்களை முழுமையாக ஆய்வு செய்தனா். இரவு 8.30 மணியளவில் ரயில் என்ஜினைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து சரக்குகள் இல்லாத நிலையிலும், சரக்குகளுடனும் ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனை ஓட்டங்களின் மூலம் ரயில்வே பாலத்தின் திறன் உறுதி செய்யப்பட்டு, அதிகாரிகள் சான்றளித்தனா். 
இதைத் தொடா்ந்து, முதல் பயணிகள் ரயிலாக திருவனந்தபுரம் மெயில் புறப்பட்டுச் சென்றனது. விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட மேம்பாலப் பகுதியில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com