மழைநீர் தேங்குவதை நிச்சயம் சரிசெய்வோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இதை நிச்சயமாக சரிசெய்து விடுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 
சென்னையில் செய்தியாளர்களுக்கு காரில் இருந்தவாறு பேட்டி அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு காரில் இருந்தவாறு பேட்டி அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: கடந்த பத்து வருடங்களாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். அதை இப்போது விமர்சனம் செய்வதற்கு தயாராகயில்லை. அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இதை நிச்சயமாக சரிசெய்து விடுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடையவுள்ளநிலையில், சென்னையில் எதிா்பாராதவிதமாக வியாழக்கிழமை நண்பகலில் மிதமான மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு, மழை படிப்படியாக அதிகரித்து, இடியுடன் கூடிய பலத்தமழை கொட்டித்தீா்த்தது. பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னை ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை பாதிப்புகளையும், மழை நீரை வெளியேற்றும் பணியையும் ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை தியாகராயநகா், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூா், நுங்கம்பாக்கம், வாலாஜா சாலை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, எம்.ஆா்.சி.நகா், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பல இடங்களில் தொடா்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா் மழை காரணமாக, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

இதனால், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் பணியை முடித்து, வீட்டுக்கு திரும்ப முடியாமல் ஊழியா்கள் சிரமப்பட்டனா். இதையடுத்து, பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வீட்டுக்கு சென்றனா். இதனால், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை இரவு 11 மணியில் இருந்து இரவு 12 மணி வரை ஒருமணி நேரம் நீட்டித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.

மழையைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தினா். வேறுவழியின்றி ஆட்டோ ஓட்டுநா்கள் கேட்ட கட்டணத்தை கொடுத்து, மக்கள் வேதனையுடன் வீட்டுக்கு பயணம் செய்தனா்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை பாதிப்புகளையும், மழை நீரை வெளியேற்றும் பணியையும் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், டாக்டர் கிரியப்ப சாலையில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மழைநீர் வடிகாலில் இருந்து மாம்பலம் கால்வாயில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இறுதியாக, கோடம்பாக்கம் மண்டலம், திருமலை பிள்ளை சாலை, பசுல்லா சாலை சந்திப்பில் டிராக்டர்களில் பொருத்தப்பட்ட நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணிகளை பாவையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம், எதிர்பாராதவிதமாக இவ்வளவு பெரிய மழை பெய்திருப்பது குறித்து கேட்டதற்கு, வானிலை மையம் பொதுவாக முன்கணிப்பு செய்து தகவல் கொடுப்பார்கள். ஆனால், இந்த முறை அவர்களாலேயே கணிக்க முடியவில்லை. அதனால் எதிர்பாராதவிதமாக திடீரென்று பேய் மழை பெய்து இருக்கிறது. ஆகவே, தேங்கியிருந்த மழை தண்ணீரை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நான் திருச்சியிலிருந்து வந்தவுடன் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள வார் அறைக்கு சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக் குறித்து கலந்து பேசி என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் தேங்கியுள்ள இடங்களில், ஆங்காங்கே மோட்டார் பம்புசெட் வைத்து மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அது ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குள் எல்லாமே சரிசெய்யப்பட்டுவிடும்.

டிராக்டர் மூலம் வெளியேற்றப்படும் மழைநீர்.

திடீர் மழை என்னும்போது, வானிலை மையம் முன்கணிப்பு அளிப்பதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா? உபகரணங்கள் மாற்றுவதற்கு மத்திய அரசிடம் ஏதாவது கோரிக்கை அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அது அவர்கள் செய்ய வேண்டிய வேலை. இருந்தாலும், நீங்கள் சொன்னதற்காக, தமிழ்நாடு அரசு இது குறித்து மத்திய அரசுக்கு நினைவுபடுத்தும் என்றார். 

மேலும் மழை தண்ணீர் தேங்கி இருக்கக்கூடிய இடங்களிலேயே, மழை தண்ணீர் தேங்கும் சூழ்நிலை இருக்கிறது. திட்டமிடுதலில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா? என்ற கேள்விக்கு, கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை இப்போது விமர்சனம் செய்வதற்கு நாங்கள் தயாராகயில்லை. மழை தண்ணீர் தேங்குவதை சரிசெய்ய வேண்டும். அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இதை நாங்கள் நிச்சயமாக சரிசெய்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என பதிலளித்தார். 

மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள்.

எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com