
கரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 57,046 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 1 லட்சத்து 53,782 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 3264 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுக்கு எதிரான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.
இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, தமிழகத்துக்கு 5 லட்சத்து 36,500 கோவிஷீல்ட், 20, 000 கோவேக்ஸின் தடுப்பு மருந்துகள் முதல்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து 5 லட்சத்து 8,500 கோவிஷீல்ட் மருந்துகளும், 1 லட்சத்து 69,920 கோவேக்ஸின் தடுப்பு மருந்துகளும் வந்தன. அவை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது, முன்களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள 195 முன்னணி தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 34 தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 57,046 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...