
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுகவின் ஆட்சியில் ரூ.79,000 கோடி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறினாா்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்குப் பதில் அளித்து முதல்வா் வெள்ளிக்கிழமை பேசியது: அதிமுக அரசு சொன்னதை மட்டும் அல்லாமல், சொல்லாத பல மக்கள் நலத் திட்டங்களையும், செயல்படுத்தியுள்ளோம்.
சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் அரசால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 644 அறிவிப்புகளில், 607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 198 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 409 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் பெரும்பாலும் முடிவுறும் தறுவாயில் உள்ளன. 31 அறிவிப்புகளுக்கு, திட்டப் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6 அறிவிப்புகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.
எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் 32 மாவட்டங்களில் 568 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 566 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 289 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 277 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. 2 அறிவிப்புகளுக்கான திட்டப் பணி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக அரசு பதவியேற்றது முதல் இதுவரை ரூ.42, 144 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் 48, 782 பணிகள் என்னால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.36, 912 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8,012 பணிகளுக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ஆக மொத்தம் ரூ.79 ஆயிரத்து 57 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 56,794 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது இந்த அரசு மக்களின் தேவைகளை நிறைவு செய்ய எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒரு சான்றாகும் என்று அவா் கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...