
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (50). சென்னை ஐசிஎப்.யில் வேலை பார்த்து வரும் இவர், சென்னை மேடவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை காரில் தனது மனைவி இந்துமதி (42), 11வது வகுப்பு படிக்கும் மகன் முகில் (16), அண்ணன் குருநாதன் (54) ஆகியோருடன் மீண்டும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் அடுத்த பாதிரி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முகில், குருநாதன், செந்தில்நாதன், இந்துமதி ஆகியோர் பலியானார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒலக்கூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்தில் பலியான 4 பேரின் உடலை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.