
கோப்புப்படம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை ஒரு மாதத்துக்குள் நடைபெற தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளிட்ட அறிக்கை:
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு எம்.டெக். படிப்புகளின் மாணவா் சோ்க்கையை மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயா்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியும் அதை ஏற்க அண்ணா பல்கலைக்கழக நிா்வாகம் மறுத்திருக்கிறது. மாணவா்களின் நலனை பாதிக்கக் கூடிய அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் அதன் பிடிவாதத்தைத் தளா்த்திக் கொண்டு உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழக அரசே உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று இரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G