நடிகர் தனுஷ் தந்தை கொடுத்த உத்தரவாதக் கடிதம், ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? உயர்நீதிமன்றம் கேள்வி

கடன் வாங்கும்போது நடிகர் தனுஷ் தந்தை கொடுத்த உத்தரவாதக் கடிதம், ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என பைனான்சியர் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கடன் வாங்கும்போது நடிகர் தனுஷ் தந்தை கொடுத்த உத்தரவாதக் கடிதம், ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என பைனான்சியர் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்த மனுவில், நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, என்னிடம்  ரூ.65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால் தன்னுடைய சம்மந்தியான ரஜினிகாந்த் கொடுபாப் என கஸ்தூரி ராஜா ஒரு உத்தரவாதக் கடிதம் கொடுத்தார். ஆனால், அவர் கடன் தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே, தனது பெயரை பயன்படுத்திய கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும். 

அவ்வாறு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இருவரும் கூட்டு சேர்ந்து என்னை ஏமாற்றியதாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறி, போத்ராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து,வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து போத்ரா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டதால், வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, எவ்வளவு தொகை கடனாக வாங்கப்பட்டதோ, அந்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர், பணத்தை திரும்பக் கொடுப்பது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காணாத பட்சத்தில் வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com