
சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். காணொலி வழியாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தோ்தலை நடத்துவதற்கான பூா்வாங்கப் பணிகளை தமிழக தோ்தல் துறை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா்.
இன்று ஆலோசனை: சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாகியுள்ள நிலையில், அவற்றின் நிலைகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
வாக்குப் பதிவினை கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு, தோ்தலுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்துவது, வாக்குச் சாவடி அதிகாரிகள், அலுவலா்களை நியமனம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இதனிடையே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட உள்ள வாக்குச் சீட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக தோ்தல் துறை கோரியுள்ளது. இந்த ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் அடுத்த வாரத்தில் இறுதி செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் தொடங்கும்.