
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் பாதை திட்டத்தை காணொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்த நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் இருந்து பங்கேற்று உரையாற்றிய முதல்வர்.
சென்னை: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையிலான எரிவாயு குழாய் பாதை திட்டமானது, பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
ராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை, சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் சென்னையை அடுத்த மணலியில் பெட்ரோலில் இருந்து கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை காணொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடியில் காவிரிப் படுகை சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் இருந்து இந்த விழாவில் காணொலி வழியாகப் பங்கேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
கரோனா தொற்று காலத்திலும்கூட கடந்த ஓராண்டில் 101 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதன்மூலம், ரூ.88 ஆயிரத்து 727 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால், 1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ரூ.31,580 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்த மாவட்டத்தில், ஒரு புதிய சகாப்தம் தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2019-இல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
சுத்திகரிப்பு நிலையத்துக்கு நிலங்கள் வழங்குவது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளைத் தவிர்த்து, சிறப்பு ஊக்கத் திட்டங்களையும் இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு வழங்கியது.
தொழில் வளர்ச்சி: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையிலான குழாய் பாதை திட்டமானது அந்தப் பகுதியின் தொழில் மேம்பாட்டுக்கு புதிய சுவாசத்தை அளிக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டமானது, பல புதிய தொழில் ஆலைகள் உருவாகும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இந்தத் திட்டமானது வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு அளிக்கவும், வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு எடுத்துச் செல்லவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
முழு ஆதரவை அளிக்கும்: தமிழகத்தில் பிரதமரால் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்துக்கு தமிழக அரசு தனது முழு ஆதரவை அளிக்கும். சுயசார்பு இந்தியா என்ற நிலையை எட்டவும், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
இந்த விழாவில், காணொலி வழியாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னையில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் பாதை திட்டத்தை காணொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கி வைத்த நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் இருந்து பங்கேற்று உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சிப்காட் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர்.