விருதுகளை வாங்கிக் குவித்து முதல் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்

அனைத்துத் துறைகளிலும் விருதுகளை வாங்கிக் குவித்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.
விருதுகளை வாங்கிக் குவித்து முதல் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்
விருதுகளை வாங்கிக் குவித்து முதல் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்


வள்ளியூர்: அனைத்துத் துறைகளிலும் விருதுகளை வாங்கிக் குவித்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வள்ளியூரில் வியாழக்கிழமை பெருமிதத்துடன் கூறினார். 

வள்ளியூர் காமராஜர் திடல் அருகே நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேலும் பேசியது, தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்துள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் புரட்சி தலைவி ஜெயலலிதா ஆக இருபெரும் தலைவர்கள் ஆட்சி செய்து மக்களுக்கு எண்ணற்ற  திட்டங்களை தந்து வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. மக்கள் தான் வாரிசு. அவர்களின் வாரிசாகத்தான் நான் உங்கள் முன் நிற்கிறேன். அவர்கள் வழியில் இன்றைக்கு  சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே செல்லும் இடமெல்லாம் அ.தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை என பச்சைப் பொய்யை பரப்பி வருகிறார். 

ராதாபுரம் தொகுதியை எடுத்துக்கொண்டால் அரசு ஐ.டி.ஐ., திசையன்விளையை தலைமையிடமாகக்கொண்ட தனித்தாலுகா அமைத்து கொடுத்துள்ளோம். தாமிரபரணி உபரிநீர் கால்வாய்த்திட்டம், 163 கோடி செலவில் ராதாபுரம் கால்வாய்த்திட்டம், ராதாபுரத்தில் குற்றவியல் நீதிமன்றம், ஆத்தங்கரைபள்ளிவாசலில் இருந்து ரூ.1 கோடியில் கால்வாய்த்திட்டம், வள்ளியூரைத் தலைமையிடமாகக்கொண்ட தனிக்கல்வி மாவட்டம், கூடங்குளத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை இப்படி எண்ணற்ற திட்டங்களை ராதாபுரம் தொகுதியில் மட்டுமே நிறைவேற்றியுள்ளோம். 

இன்னும் தமிழகம் முழுவதும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக திகழ்ந்துவருகிறது தமிழகம். நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்து கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது அம்மாவின் அரசு. இதன் மூலம் 435 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்றுள்ளது. தாய் அந்தஸ்த்தில் இருந்து பெண்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து வருகிறது இந்த அரசு. ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஏற்றம்பெறச்செய்து வருகிறோம். அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளை திறந்து அதன் மூலம் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. 

இந்தியாவிலேயே உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம். மக்களை ஏமாற்றும் நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின். கிராமம் கிராமமாக கூட்டம் நடத்தி இந்த வேலையைத்தான் செய்கிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு இந்த அரசு. 2006-ல் முதல்வராக இருந்த கருணாநிதி நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். அதைநிறைவேற்றினாரா? ஆனால் அம்மாவின் அரசு ஏழை விவசாயிகளுக்கு பயிர்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து அதனை நிறைவேற்றி வருகிறோம். தி.மு.கவை கண்டாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

அமைதிப்பூங்கா
அமைதிப்பூங்காவாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்தியா டுடே என்ற ஆங்கில நாளிதழ் இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக அறிவித்து அதற்கான விருதை வழங்கியுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து 3 ஆண்டுகளாக விருது பெற்றுள்ளோம். இது மட்டுமல்ல உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை இப்படி ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு விருதுகளை பெற்று இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது தமிழகம். 

தி.மு.க. ஆட்சியில் என்ன சாதித்தீர்கள். தி.மு.க. நாட்டு மக்களை பார்க்காமல் அவர்கள் வீட்டு மக்களை மட்டும் பார்த்து முன்னேற்றி வருகிறார்கள். தி.மு.க. கட்சி ஒரு தனியார் கம்பெனி. அதன் முதலாளி ஸ்டாலின். கனிமொழி மற்றும் நிர்வாகிகள் போர்டு ஆப் டைரக்டர்ஸ். தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார். அவருக்கும் அந்த கட்சிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. என்னுடைய அனுபவம்தான் அவரது வயது. அவரும் செல்லும் இடமெல்லாம் அம்மாவின் அரசை குறைகூறி வருகிறார். கருணாநிதியின் பேரன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. அ.தி.மு.க. கட்சி ஜனநாயகக் கட்சி. மக்களோடு இருந்து மக்களின் கஷ்டங்களை தெரிந்த கட்சி. இந்த கட்சியில் விசுவாசமாக இருந்தால், உண்மையாக உழைத்தால் மக்கள் நம்பிக்கையை பெற்றால் உயர்வான இடத்திற்கு வரலாம். 

செல்போன் மூலம் மக்கள்குறைகளை தெரிவிக்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இத்திட்டம் மூலம் மக்கள் அதிகாரிகளிடம் சென்று குறைகள் சொல்லவேண்டாம். செல்போன் மூலம் தெரிவித்தாலே போதும் அதிகாரிகள் மக்களைத் தேடி வந்து குறைகள் சரிசெய்வார்கள். அறிவிப்பு கொடுத்தால் அதனை நிறைவேற்றிகாட்டும் அரசு இந்த அரசு. 

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கி அதில் இலவசமாக வீடு கட்டிக்கொடுத்து வருகிறோம். வரும் காலத்தில் தமிழ்நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை அம்மாவின் அரசு ஏற்படுத்திகொடுக்கும். அம்மா மின்கிளினிக், கால்நடை வளர்ப்புத் திட்டம், தடையில்லா மின்சாரம், உபரி மின்சாரம் உற்பத்தி இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஜெயலலிதா இருக்கின்ற போது அறிவித்த அத்தனை திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றி வருகிறோம். 

சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ள அரசு இந்த அரசு. கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்ல ரூ.20 ஆயிரம் வழங்கி வந்ததை ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருகிறோம். கிறித்தவ தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.1 கோடி வழங்கி வந்ததை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளோம். இப்படி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றி அனைத்து துறைகளிலும் விருதுகளைப் பெற்று இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு இன்னும் பெற்றிநடைபோட இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் முதல்வர் பழனிசாமி. 

கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், திசையன்விளை ஏ.கே.சீனிவாசன், முருகையா பாண்டியன், மாவட்ட பொருளாளரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான ப.செளந்தரராஜன், மனோஜ்பாண்டியன், இசக்கிசுப்பையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.மைக்கேல் ராயப்பன், ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி அமலராஜா, அழகானந்தம், கே.பி.கே.செல்வராஜ், வடக்கன்குளம் செல்வராஜ், வள்ளியூர் நகர செயலாளர் பொன்னரசு, பணகுடி முன்னாள் நகர செயலாளர் லாரன்ஸ், திசையன்விளை ஜான்சிராணி, வள்ளியூர் எட்வர்ட் சிங், சண்முகபாண்டி, செழியன், ராதாபுரம் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் முதல்வர் பழனிசாமி, நரிக்குறவர் குழந்தைக்கு விசாந்தினி என பெயர்சூட்டினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com