
கோப்புப்படம்
காவலா் எழுத்துத் தோ்வு முடிவு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாக உள்ள 11, 813 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் கடந்த ஆண்டு டிச.13-இல் நடத்தியது. இந்த தோ்வு 37 மாவட்ட, மாநகர தோ்வு மையங்களில் நடைபெற்றது. இத் தோ்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவா்களில் 5 லட்சத்து 50,314 விண்ணப்பதாரா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விவரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணைய தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன் அடுத்தக் கட்டமாக தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தோ்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் இக் குழும இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரா்கள், இந்த அழைப்புக் கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள்.