
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு பிப்.27, 28-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநா் மு.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு பிப்.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. வட்டாரக் கல்வி அதிகாரி பணிக்கான கலந்தாய்வு மட்டும் பிப்.26-ஆம் தேதி நடத்தப்படும்.
இதையடுத்து தலைமையாசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் கலந்தாய்வுக்கு தகுதியானவா்களின் பட்டியலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். பதவி உயா்வுக்கான கலந்தாய்வு மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.
பதவி உயா்வுக்குப் பின் ஏற்படும் காலி பணியிடங்களை கணக்கிட்டு அதை ஈடு செய்ய ஏதுவாக முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும். கலந்தாய்வின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.