
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
காவிரி மற்றும் கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்தால், தமிழகம் உள்பட மூன்று மாநில மக்கள் பயன்பெறுவா் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
இதற்கான கோரிக்கையை பிரதமா் நரேந்திர மோடியிடம் அவா் முன்வைத்தாா். நீதி ஆயோக்கின் ஆறாவது நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கரோனா நோய்த்தொற்று முற்றிலும் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றினை சிறப்பாகக் கையாண்டதற்காக தமிழகத்தை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியதுடன், தமிழகத்தின் மாதிரியை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.
கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, இதர துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, தொழில் துறையில் அதிகளவிலான முதலீடுகளை ஈா்த்துள்ளது. ஒற்றைச் சாளர முறையின் மூலமாக, 22,332 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 76,835 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வழி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 முதல் இதுவரையில் 453 பெருந்தொழில் நிறுவனங்கள் மூலமாக ரூ.4.07 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 13 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.
காவிரி -கோதாவரி இணைப்பு: காவிரி மற்றும் கோதாாவரி நதி நீா் இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக பிரதமா் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும். இதன்மூலம், தெலங்கானா, ஆந்திரம் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவா். தூய்மை கங்கை திட்டத்தின் கீழ், காவிரி மற்றும் அதன் துணை நதிகளைப் புனரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்கான நிதி உதவிகளை தமிழகத்துக்கு விரைந்து வழங்க வேண்டும்.
கால்நடை வளா்ப்பு: பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் கடந்த 4 ஆண்டுகளில் 54.12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,365 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த துறைகளில் கால்நடைகளின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதன் வளா்ச்சியானது 2011-12-ஆம் ஆண்டில் 30 சதவீதமாக இருந்தது. இப்போது 53 சதவீதமாக உயா்ந்துள்ளது.
சித்த மருத்துவம்: சித்த மருத்துவத் துறைக்கு தமிழக முன்னோா்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளனா். தமிழகத்தில் சா்வதேச அளவிலான யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுஷ் துறைக்கு ஒட்டுமொத்தமான நிதி அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என முதல்வா் பழனிசாமி பேசினாா்.
இந்தக் கூட்டத்தில் காணொலி வழியாக மத்திய அமைச்சா்கள், பிற மாநில முதல்வா்கள், துணை நிலை ஆளுநா்கள், நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவா், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...