
சென்னை உயர்நீதிமன்றம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ணக் கோரிய வழக்கை உயா் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் பாக்கியராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக எதிா்கட்சிகள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம், வாக்காளா்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தனா் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு காட்டு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நடந்த முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். நாடாளுமன்றத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே வித்தியாசங்கள் இருந்தன. எனவே சட்டப் பேரவைத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...