அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடித்து, திமுக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்: பிரகாஷ் காரத்

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடித்து, மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கமான திமுக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்.

சிதம்பரம்: தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடித்து, மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கமான திமுக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்ததில், ஏதோ ஒரு புது அரசாங்கத்தை உருவாக்குவது அல்ல நமது நோக்கம். நாம் உருவாக்கும் அரசாங்கம் மக்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய, மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மக்கல் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் பாதுகாக்கக்கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும். 

அதிமுக பாஜகவின் அடிமை அரசாக இருக்கிறது. அதனால் தமிழக மக்களைப் பாதுகாக்க  முடியாது. மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகள் அமலாக்க மாட்டோம் என்று மத்திய அரசாங்கம் சொல்கிறது. அப்படியென்றால் அந்தச் சட்டங்களில் கோளாறு இருப்பதை அது உணர்ந்துள்ளது என்றுதானே பொருள். பிறகு அவற்றை திரும்பப் பெறுவதில் என்ன சிக்கல். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வரியே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடுவதற்குக் காரணம் மத்திய அரசின் வரியே. பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் 50-60 ரூபாய்தான் பெட்ரோல் விலை. இந்தியாவில் 100 ரூபாய் பெட்ரோலில் 60 ரூபாய் மத்திய மாநில அரசின் வரிகள். குறிப்பாக மத்திய அரசின் வரி மூன்றில் இரண்டு மடங்கு. மத்திய அரசு தன்னுடைய வரியைக் குறைத்து மக்கள் சுமையைக் குறைக்க வேண்டும். கார்ப்பரேட்களிடம் வசூலிக்க வேண்டிய வரியைக் குறைத்ததன் காரணமாக வருமானம் குறைந்து வருவதை ஈடுகட்டவே பெட்ரோல், டீசல், எரிவாய விலையை ஏற்றி மக்களின் மீது தாங்க முடியாத அளவுக்கு சுமையை ஏற்றியிருக்கிறது மத்திய அரசு. 

விவசாயிகள் உரிமைகள் பறிப்பு, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை என மத்திய அரசு எதைச் செய்தாலும், அதிமுக அரசு விமர்சிக்காமல், எதிர்க்காமல், மாறாக ஆதரிக்கும் அடிமை அரசாங்கமாக இருக்கிறது. 

வரும் தேர்தலில் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தை நாம் உருவாக்க வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடித்து, திமுக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். கேந்திரமான நான்கே துறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற துறைகளில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய பாஜக அரசு விற்கப்போவதாக சொல்லியுள்ளது. இது தேசிய இறையாண்மைக்கே ஆபத்தை விளைவிக்கும். 

புதுச்சேரியில் பிரதமர், மாநில அரசு, மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. அதனால் தான் இங்கு ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என்று பேசியுள்ளார். துணைநிலை ஆளுநரைக் கருவியாகப் பயன்படுத்தி மத்திய அரசு தா  நான்கரை ஆண்டுகளாக மாநில அரசை செயல்படாமல் தடுத்து வைத்திருந்தது. தற்போது ஆட்சியையே கவிழ்த்துவிட்டார்கள் என பிரகாஷ்காரத் தெரிவித்தார். 

பேட்டியின் போது மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, ஜி.மாதவன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், நகரச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com