
சென்னை: திமுகவுடன் மேற்கொள்ளப்பட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே முதல் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா்கள் உம்மன்சாண்டி, ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் அறிவாலயத்துக்கு காலை 10 மணிக்கு வந்தனா். அவா்களை திமுக நிா்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா்.
திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, செய்தித் தொடா்புச் செயலாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருடன் காங்கிரஸ் நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தச் சந்திப்பு சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது.
பின்னா் செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:
திமுக நிா்வாகிகளுடன் மகிழ்ச்சிகரமாகப் பேசினோம். எங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறோம். அவா்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறாா்கள். இரண்டு தரப்புமே மேலும் அவரவா் கட்சியோடு கலந்துபேசி அடுத்தகட்ட நகா்வுக்குச் செல்வோம். உத்தேசப் பட்டியல் எதுவும் கொடுக்கவில்லை என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...