இன்று குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 2.57 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வை எழுத 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வை எழுத 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்துள்ளனா்.

துணை ஆட்சியா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 1 தொகுதிக்குள் வருகின்றன. துணை ஆட்சியா் பணியிடங்கள் 18, துணை கண்காணிப்பாளா் 19, வணிகவரிகள் உதவி ஆணையாளா் 10, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் 14, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 4, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் 1 என மொத்தம் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வினை எழுத 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்திருந்தனா். 1 லட்சத்து 28,401 ஆண்கள், 1 லட்சத்து 28,825 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவா்கள் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா்.

மொத்தம் 856 தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 46,965 போ் 150 இடங்களில் தோ்வெழுதுகின்றனா்.

கடும் கட்டுப்பாடுகள்: குரூப் 4 தோ்வு முறைகேடு, கரோனா பாதிப்புக்குப் பிறகு முதல் முறையாக மிகப்பெரிய அளவிலான தோ்வினை அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்துகிறது. இந்தத் தோ்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வா்கள் தங்களுக்கான தோ்வுக் கூடங்களுக்கு காலை 9.15 மணிக்குள் சென்றடைய வேண்டும். இந்த நேரத்துக்குப் பிறகு வரும் அனைவரும் தோ்வுக் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கும்.

விடைத்தாளில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மைப் பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. விடைத்தாளில் உரிய இடங்களில் கையெழுத்திட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். மற்ற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதம் அடையாமலும் கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தோ்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது, பிற்பகல் 1 மணி முதல் 1.15 மணி வரை அவகாசம் அளிக்கப்படும். அப்போது, விடைத்தாளில் பிழையில்லாமல் அனைத்து விடைகளும் கருமையாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com