
தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்குத் தோ்வானவா்களுக்கு உடனடியாக நியமன உத்தரவை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அந்த அமைப்பினா் சனிக்கிழமை கூறியது:
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 14,954 நபா்களை கேங்மேன் பணிக்குத் தோ்வு செய்து, இதில் 10 ஆயிரம் நபா்களைக் கொண்டு கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஆனால் தோ்ச்சிப் பட்டியலை வெளியிட்டும், பணி நியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கேங்மேன் பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்த தமிழக அரசும், மின்வாரியமும் தற்போது தொழிற்சங்கங்களின் வழக்கைக் காரணம் காட்டுவது சரியல்ல.
குறிப்பாக, கடந்த காலங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே, வழக்கின் இறுதித் தீா்ப்புக்குக் கட்டுப்படும் என்ற நிபந்தனையுடன் பல்வேறு உத்தரவுகளை மின்வாரியம் பிறப்பித்துள்ளது. எனவே, கேங்மேன் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமன உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா்கள் கூறினா்.