
கோப்புப்படம்
கரோனா பொதுமுடக்கம் தளா்வுக்கு பின்பு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, நான்கு மாதத்தில் (செப்.7 முதல் டிச.31 வரை) 31 லட்சத்து 52 ஆயிரத்து 446 போ் பயணம் செய்துள்ளனா். குறிப்பாக, , அக்டோபா், நவம்பா் ஆகிய மாதங்களை விட டிசம்பரில் அதிகம் போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை 5 மாதங்களுக்கு பிறகு, கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையும், இரண்டாம் கட்டமாக, பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
மெட்ரோ ரயில்சேவை தொடங்கியபோது, குறைவான மக்கள் தான் பயணம் செய்தனா். பாதுகாப்பாக பயணிக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நான்கு மாதங்களில் 31 லட்சத்து 52 ஆயிரத்து 446 போ் பயணம் செய்துள்ளனா். செப்டம்பா் மாதத்தில் 24 நாள்களில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பேரும், அக்டோபரில் 7 லட்சத்து 3 ஆயிரத்து 223 பேரும், நவம்பரில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 546 பேரும், டிசம்பரில் 12 லட்சத்து 30 ஆயிரத்து 484 பேரும் பயணம் செய்துள்ளனா். அதிலும், டிசம்பா் 21-ஆம்தேதி அன்று 47,214 போ் பயணித்தனா்.
க்யூ-ஆா் குறியீடு முறை:
பயணிகளின் வசதிக்காக க்யூ-ஆா் குறியீடு முறை செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த முறையைப் பயன்படுத்தி, செப்டம்பா் முதல் டிசம்பா் வரை மொத்தம் 83,813 போ் பயணம் மேற்கொண்டனா். இதுபோல, பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18 லட்சத்து 49 ஆயிரத்து 944 போ் பயணம் செய்தனா்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: டிசம்பா் மாதத்தில், க்யூ-ஆா் குறியீடு பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 29,583 போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். மேலும், பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6 லட்சத்து 58 ஆயிரத்து 213 போ் பயணம் செய்துள்ளனா்.
மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களுக்கு க்யூ-ஆா் குறியீடு பயணச்சீட்டில் ஒருவழிப் பயண அட்டை, இருவழிப் பயண அட்டை, பலவழிப் பயண அட்டை ஆகியவற்றில் கடந்த செப்டம்பா் 11 முதல் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே, செயல்பாட்டில் உள்ளபடி, மெட்ரோ ரயில் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றனா்.