முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையா்களை கைது செய்யாதது ஏன்?

முன்னாள் எம்எல்ஏ சுதா்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையா்கள் 23 பேரை கைது செய்ய காலதாமதம் ஏற்பட்டது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பெரியபாளைம் காவல் ஆய்வாளருக்கு
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

முன்னாள் எம்எல்ஏ சுதா்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையா்கள் 23 பேரை கைது செய்ய காலதாமதம் ஏற்பட்டது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பெரியபாளைம் காவல் ஆய்வாளருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ சுதா்சனம். அவரின் வீட்டுக்குள் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் நுழைந்த பவாரியா கொள்ளையா்கள், சுதா்சனத்தை கொலை செய்தனா். மேலும், குடும்பத்தினரையும் தாக்கி , வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பவாரியா கொள்ளை கும்பலை, ஹரியாணா மாநிலம் வரை விரட்டிச் சென்ற போலீஸாா், இந்தக் கும்பலின் தலைவா் ஓம் பிரகாஷ், அவரின் சகோதரா் ஜெகதீஸ் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீதான வழக்கு, சென்னையில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சிறையில் ஓம் பிரகாஷ் மரணம் அடைந்தாா். இந்த நிலையில், 15 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஜெகதீஷ், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி பாரதிதாசன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, ‘இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மொத்தம் 32 பவாரியா கொள்ளையா்கள் ஈடுபட்டுள்ளனா். இதில் 9 பேரை மட்டுமே போலீஸாா் கைது செய்தனா். 23 பேரை தேடி வருகின்றனா். இந்த 9 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அந்த வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டது. மீதமுள்ள 8 பேரில் ஒம் பிரகாஷ் இறந்து விட்டாா். ஜாமீனில் வெளியில் வந்த 4 போ் தலைமறைவாகி விட்டனா். அவா்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ் உள்பட 3 போ் மீதான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனா். 12 சாட்சிகளை விசாரிக்க வேண்டி உள்ளது. இந்தக் கொடூர கொள்ளை கும்பல் மீது பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 25 வழக்குகள் உள்ளன. பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி, ‘கொடூரமான கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக பல குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. மனுதாரா் 15 ஆண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் உள்ளாா். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவடையாமல் உள்ளது. எனவே, இந்த வழக்கைப் பதிவு செய்த பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் வரும் 18 -ஆம் தேதி நேரில் ஆஜராகி, குற்றவாளியைக் கைது செய்வதிலும், வழக்கு விசாரணையிலும் ஏற்பட்ட இவ்வளவு பெரிய காலதாமதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com