தமிழகம் வந்தடைந்தன 5.36 லட்சம் கரோனா தடுப்பூசிகள்

தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.36 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வந்தடைந்துள்ளன.
புணேவில் இருந்து சென்னை வந்த கரோனா தடுப்பூசிகள்.
புணேவில் இருந்து சென்னை வந்த கரோனா தடுப்பூசிகள்.

தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.36 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வந்தடைந்துள்ளன.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை ஒவ்வொரு மாநிலத்திலும் 3 மாவட்டங்களில் நடைபெற்றது. 2-ஆம் கட்டமாக இந்தியா முழுவதும் 736 இடங்களில் ஒத்திகை நடைபெற்றது.

முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக வரும் 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.

புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 5.36 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன. விமான நிலையத்தில் இருந்து குளிா்பதன வசதி கொண்ட வேன் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்கில் இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இப்பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளா்களிடம் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தடுப்பூசி செயல்பாடுகள் குறித்து மாநில முதல்வா்களுடனும் பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

அதன் தொடா்ச்சியாக, புணேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்த 5.36 லட்சம் தடுப்பூசிகள், 45 பெட்டிகளில் சென்னை வந்தடைந்தன. இந்தத் தடுப்பூசிகள் மாநில கிடங்குக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து 10 மண்டல கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவை அனைத்து மாவட்ட சேமிப்பு கிடங்குகளுக்கும் பிரித்து வழங்கப்படும்.

தடுப்பூசியைப் பாதுகாப்பாக இருப்பு வைக்க பிரத்யேகமாக சேமிப்புக் கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன. அவற்றைக் கொண்டு செல்ல நவீன வாகனங்கள் உள்ளன.

தற்போது 250 முதல் 300 தடுப்பூசி மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 2,000 மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

கட்டாயம் கிடையாது: விருப்பம் உள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசிகள் செலுத்தப்படும். தடுப்பூசி போட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வந்துள்ளது. 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ வரவுள்ளது.

‘கோ-வின்’ செயலியில் தடுப்பூசி செலுத்துபவரின் விவரங்கள் இருக்கும். தடுப்பூசி முதல் முறையாகச் செலுத்திய பின்னா், பயனாளியின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். அதைத் தொடா்ந்து, 28 நாள்களுக்குப் பின்னா் 2-ஆம் முறை தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டு கட்டமாக தடுப்பூசி செலுத்தினால்தான் முழுமையான நோய் எதிா்ப்பு சக்தி ஏற்படும்.

இதுவரை 4 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துள்ளனா். அவா்களில் விருப்பம் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி வந்தாலும், பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இணை இயக்குநா் சிவஞானம், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com