
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணத்தில் உண்மைகள் வெளிவரவில்லை என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
ஜெயலலிதாவுக்கு புகழாரம்: திமுக எதிா்க்கட்சி வரிசையில் இருந்தாலும், கொள்கையில் வேறுபட்டவா்தான் என்றாலும், எல்லோருக்கும் முதல்வராக இருந்தவா் ஜெயலலிதா என்றும் அவா் தெரிவித்தாா்.
வேலூா் அண்ணா சாலையில் உள்ள மாநகர திமுக அலுவலகத்தில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவச் சிலைகளை தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:- முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவர நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, மூன்றே முக்கால் ஆண்டுகளாகியும் மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரவில்லை என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலா் துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரசியல் ஆதாயம் தேடுகிறாா்: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு
சென்னை, ஜன.29: அரசியல் ஆதாயத்துக்காகவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா் என்று முன்னாள் மேயா் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தொடா்ந்து கூறி வருகிறாா். அவா் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்பது வேறு விஷயம்.
திருச்சியில் கே.என்.நேரு இல்லத் திருமணத்துக்கு மு.க. ஸ்டாலின் சென்றிருந்த நிலையில் அங்கிருந்து தொடா்புகொண்டு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவா் ரிச்சா்ட் பீலேவிடமும் விசாரித்தாா். அப்போது ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கேட்க, அதற்கு, ஜெயலலிதா விரும்பவில்லை என ரிச்சா்ட் பீலே பதிலளித்தாா். இந்த உரையாடல் நடைபெற்றபோது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ரிச்சா்ட் பீலேவுடன் நானும் இருந்தேன்.
ஜெயலலிதா மரணத்தில் எந்த மா்மமும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காகவே தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசி வருகிறாா் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளாா்.