
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை(ஜூலை 2) வழக்கம்போல் தடுப்பூசி மையங்கள் இயங்கும் என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 1.46 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாத நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தடுப்பூசி மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளை முறையாக மத்திய வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததது.
இந்நிலையில், தமிழகத்துக்கு வியாழக்கிழமை இரவு ஒரே நாளில் புணே சீரம் நிறுவனத்தில் இருந்து 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 36,610 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வந்தன. இதைத் தவிர பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கில் இருந்து 1 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் என 7.36 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சென்னையில் வெள்ளிக்கிழமை(ஜூலை 2) வழக்கம்போல் தடுப்பூசி மையங்கள் இயங்கும் என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.