
தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
இவர், கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் மறைந்த பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலர் - தாளாளர், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி. துளசிஅய்யா வாண்டையாரின் இளைய சகோதரர். காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1984- ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இவர் 2001-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் (தஞ்சாவூர் மாவட்டம்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, 23 நாள்கள் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
மேலும் தஞ்சாவூர் வங்கி இயக்குநராகவும், பல்வேறு கிளப்களில் கௌரவ பொறுப்பிலும் இருந்தவர்.
இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்டு பூண்டி கிராமத்தில் மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.
இவரது மனைவி அம்மணி அம்மாள் 2013 ஆம் ஆண்டில் காலமானார். மகன் தனசேகர வாண்டையார், மகள் பொன்னம்மாள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.