பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கும் பெண்களுக்கு தனி அனுமதிச் சீட்டு: ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  

வரும் ஜூலை 12 முதல் அவர்களுக்கு தனித்தனி வண்ணங்களுடன் பயண அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்  (கோப்புப்படம்)
அமைச்சர் ராஜகண்ணப்பன் (கோப்புப்படம்)

கட்டணமின்றி பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள ஏதுவாக, வரும் ஜூலை 12 முதல் அவர்களுக்கு தனித்தனி வண்ணங்களுடன் பயண அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில், செய்தியாளர் சந்திப்பின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பேசுகையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், இயக்கப்படுகின்ற ஏறத்தாழ 19,700 பேருந்துகளில், 14,215 பேருந்துகள் இன்று (05.07.2021) இயக்கப்படுகின்றன. 

அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகள் தற்போது இயக்கப்படவில்லை. நாளை முதல் இந்த 2,100 பேருந்துகளை தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளும் 50 சதவிகித இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படும். பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளான, கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் விகிதம் ஒரு பேருந்துக்கு 2.92 என்று இருந்தது, தற்போது 2.62 என்ற விகிதத்தில் குறைந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, ஓட்டுநர், நடத்துநர்கள் குறைவாக உள்ளதை, தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக் கழகங்கள் ஏறத்தாழ, 33 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள இந்த சூழ்நிலையிலும், பொது மக்கள் எந்தவிதத்திலும், பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின், திருக்குறளுடன் விளக்க உரையையும் சேர்த்து பலகையில் வைத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதனைத் தொடர்ந்து, விளக்க உரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

பணிக்கு செல்லும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர், திருநங்கையர்கள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்திட ஏதுவாக 7,291 சாதாரண, கட்டணப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 1,550 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,054 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 813 பேருந்துகளும், கோயம்பத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,140 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,257 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 890 பேருந்துகளும், திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 587 பேருந்துகள் என ஆகமொத்தம் 7,291 சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது பெண்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. கட்டணமின்றி பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள ஏதுவாக, வரும் 12.07.2021 முதல் அவர்களுக்கு தனித்தனி வண்ணங்களுடன் பயண அனுமதி சீட்டு வழங்கப்படும்.

ஓட்டுநர் உரிமம் பெறுவது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் சில விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து, பின்னர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

டீசல் விலை அதிகரித்து வருவதால் மின்சாரப் பேருந்துகள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான உள்கட்டமைப்புகள் 6 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட்டு, பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும். டீசல் பேருந்துகளை விட மின்சாரப் பேருந்துகள் 5 மடங்கு விலை கூடுதலாக உள்ளது. 

டீசல் பேருந்தையும், மின்சாரப் பேருந்தையும் ஒப்பிட்டு கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும். பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் பேருந்துகளை இயக்கிடவும், நஷ்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திடவும், இந்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com