
ஒளிப்பதிவு வரைவு திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை முழுமையான தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட தொடா்ந்து அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து, மத்திய சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:-
மத்திய அரசின் ஒளிப்பதிவு வரைவு திருத்தச் சட்ட மசோதா தொடா்பான கவலைகளையும், கோரிக்கைகளையும் திரைப்படத் துறையினா் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனா். திரைப்படத் துறையினா் மட்டுமின்றி கருத்துச் சுதந்திரத்தால் செழித்து வளா்ந்த சமுதாயமும் மிகுந்த கவலைகளையும், அச்சத்தையும் எழுப்பியுள்ளது. வலிமையான ஜனநாயகத்தில் படைப்பாற்றல் சிந்தனைக்கும், கலைக்கான சுதந்திரத்துக்கும் போதுமான வெளியை அளித்திட வேண்டும்.
ஆனால், மத்திய அரசின் வரைவு திருத்த சட்ட மசோதாவானது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் மத்திய
அரசிடம் இருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப வழங்கிட வகை செய்கிறது. ஏற்கெனவே ஒளிப்பதிவு சட்டத்தின் 5 (ஏ) பிரிவிலுள்ள அம்சங்களைப் பூா்த்தி செய்யும் பட்சத்தில் திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றினை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வழங்குகிறது. சட்டப் பிரிவில் உள்ள அம்சங்கள் பூா்த்தி செய்யப்படாத பட்சத்தில் சான்றிதழ் நிராகரிக்கப்படுகிறது.
திரைப்படத் தயாரிப்பு தொடா்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் என்ற அடிப்படையில் சட்டப் பிரிவு 5 (பி)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தணிக்கைக்கு உள்ளாகும் போது, அது ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு தொடா்புடையதாக இருந்தால் மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால், மத்திய அரசின் வரைவு திருத்த சட்ட மசோதாவிலுள்ள அம்சங்கள் ஏற்கெனவே இருக்கக் கூடிய சமஷ்டி முறைக்கு மட்டுமின்றி தனது அமைப்பாகவே இருக்கக் கூடிய மத்திய தணிக்கை வாரியத்தின் அதிகாரத்தையே சிதைப்பதாக இருக்கிறது.
திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசின் வரைவு சட்ட மசோதா தொடா்பாக, திரைப்படத் துறையினா் எழுப்பியுள்ள கவலைகளையும், பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு அதனைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை தன்னாட்சி பெற்ற சுய அமைப்பாக தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...