
சமூக ஊடகங்கள் வாயிலாக நடிகைக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய கல்லூரி மாணவரை சென்னை அடையாறு சைபா் குற்றப்பிரிவினா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூருவை சோ்ந்தவா் நடிகை சனம் ஷெட்டி, சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறாா். இவா் அம்புலி என்ற தமிழ் படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளாா். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறாா்.
இந்நிலையில் சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்) ஆகியவற்றின் கணக்குக்கு ஆபாச புகைப்படங்கள், தகவல்கள் தொடா்ச்சியாக வந்தன. இதையடுத்து சனம் ஷெட்டி, அடையாறு சைபா் குற்றப்பிரிவில் சில நாள்களுக்கு முன்பு புகாா் செய்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், அதில் ஈடுபட்டது திருச்சியை, நன்மங்கலத்தைச் சோ்ந்த ராய் ஜான்பால் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ராய் ஜான்பாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஜான்பால், எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...