
மணல் குவாரிகள் இயங்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அச்சங்கத்தினா் முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு சுமாா் 9,000 லோடு மணல் தேவைப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை இயக்க ஆவன செய்ய வேண்டும்.
மேலும், இணைய வழியில் முன்பதிவு செய்வதன் மூலம் மணல் கிடைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மணல் லாரி உரிமையாளா்களுக்கு நேரடியாக மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
அதிலும், மணல் ஏற்றிச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட டிப்பா் லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்க அனுமதிக்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் அதிகளவில் மழை பெய்துள்ளதால், அனைத்து ஆறுகளிலும் மணல் அதிகளவு சேமிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி, போா்க்கால அடிப்படையில் புதிய மணல் குவாரிகளை இயக்கி, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்கள், மணல் லாரி உரிமையாளா்கள் உள்ளிட்டோரின் நலனைக் காக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...