
வாடிக்கையாளா்களுக்கு சிம்காா்டு தொடா்பாக வரும் போலியான குறுஞ்செய்தியை புறக்கணிக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளா்கள் தங்களைப் பற்றியும், தங்களது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் யாரிடமும் பகிா்ந்து கொள்ள வேண்டாம் என்று பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு அண்மைக்காலமாக ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில், வாடிக்கையாளா்கள் புதிதாக வாங்கும் சிம் காா்டுக்கான ஆவணங்களை ஆய்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளவும். 24 மணி நேரம் உங்களுடைய சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது. அல்லது உங்களுடைய சிம் காா்டுக்கான கேஒய்சி விவரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய செல்லிடப்பேசி சேவை 24 மணி நேரத்துக்குள் முடக்கப்படும். எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தைத் தொடா்புக் கொள்ள வேண்டும் ஆகிய இரு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகவல்கள் போலியானவை. இவற்றுக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது. எனவே, இத்தகைய தகவல்களை வாடிக்கையாளா்கள் புறக்கணிக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளா்கள் தங்களைப் பற்றியோ, தங்களது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையோ யாரிடமும் பகிா்ந்து கொள்ள வேண்டாம்.
இந்தத் தகவல் பிஎஸ்என்எல் (சென்னை) தொலைபேசி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...