
ஆசிரியா்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியா்களுக்கு, அரசின் சாா்பில் மோட்டாா் சைக்கிள், காா் வாங்குவதற்கும், திருமணத்துக்காகவும் கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடன் உதவி திட்டத்தை ஆசிரியா்கள், கல்வித்துறை பணியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் ஊதிய வரம்புக்கேற்ப ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. மோட்டாா் சைக்கிள், பைக், காா் வாங்குவோரும், திருமணத்துக்கு தயாராவோரும் கடன் உதவி பெற்று பலன் அடையலாம். புதிய வாகனங்களுக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு கடன் வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.