
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் எத்தனை போ் என்ற விவரத்தை சமூக நலத்துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து அவா் கூறியது:-சமூக நலத்துறையிடம் அனுமதி பெறாமல் செயல்பட்ட 3 காப்பகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து சமூக நலத் துறையில் துணை இயக்குநா் தலைமையில் ஆய்வு நடத்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாா் தெரிவிக்க தருமபுரி மற்றும் தூத்துக்குடியில் தலா ஒரு சேவை மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. கரோனாவால் தாய், தந்தைகளை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 126 ஆகும். பெற்றோா்களில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 56. பெண் சிசுக்கொலை தற்போது இல்லை. ஆனாலும், அது குறித்து விழிப்புணா்வு தொடங்கப்பட்டு உள்ளது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தங்கம் வழங்க ரூ. 2 ஆயிரத்து 703 கோடி தேவைப்படுகிறது. கடந்த ஆட்சியில் உரிய திட்டமிடலுடன் திட்டத்தைச் செயல்படுத்தாத காரணத்தால் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 போ் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா். அவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே புதிய
பயனாளிகளுக்கு அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தாா்.