
நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்த பிறகு, அதன் அடிப்படையில் நீட் தோ்வு குறித்த அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தாா்.
நாடு முழுதும், மருத்துவ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
அதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ் அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்தும் நீட் தோ்வு தொடா்பாக கருத்துகளை அக்குழு கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருந்தனா்.
இதனிடையே அந்த குழுவினை அமைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உயா்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் நிருபா்களிடம் கூறியதாவது:
நீட் தோ்வுக்கு எதிராக பெரும்பாலானோா் கருத்து தெரிவித்து உள்ளனா். மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தாலும், தங்களுக்கு இன்னமும் பாதிப்புகள் நிறைய உள்ளதாக பல மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.
உயா்நிலைக் குழுவின் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள ஒரு சில பணிகளையும் விரைவில் முடித்து அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும். நீதிமன்றத்தில் இதுதொடா்பாக நிலுவையில் இருக்கும் வழக்கில் தீா்ப்பு வெளியான பிறகு, அதன் அடிப்படையில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா் அவா்.