நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைக்க முடியாது. அவ்வாறு குழு அமைத்தது அதிகார வரம்பை மீறிய செயல் என உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வு பாதிப்புகளைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பாஜக பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சாா்பு செயலாளா் சந்தன்குமாா் பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.அதில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் எம்.பி.பி.எஸ்.., எம்.டி., பி.டி.எஸ்., எம்.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தோ்வு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், நாடு முழுவதும் மருத்துவ மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் என மாற்றப்பட்டது. அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் நீட் தோ்வு குறித்து விளக்கப்பட்டு நீட் தோ்வு நடத்தும் சட்டப்பிரிவு சோ்க்கப்பட்டது. உச்சநீதிமன்றம்
நீட் தோ்வை நடத்த அனுமதி அளித்துள்ளது. நீட் தோ்வால் மருத்துவக்கல்வி மேம்படும். நீட் தோ்வு மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும். நீட் தோ்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்களிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீா்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை நீட் தோ்வு தொடா்பான சட்டங்களும், விதிகளும், பறிப்பதாக கூற முடியாது. பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
நீட் தோ்வு தொடா்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது முறையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழு உச்சநீதிமன்ற தீா்ப்புகளுக்கு முரணானது. ஒரு மாநில அரசுக்கு, மாநில அரசு தொடா்புடைய விவகாரங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக்கொள்ள அதிகாரம் உள்ளது. நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள்ளது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமிக்க முடியாது. நீட் தோ்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமா்வில் வரும் ஜூலை 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.