
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்களில் ‘மத்திய அரசு’ என்ற பெயா் ‘ஒன்றிய அரசு’ என விரைவில் மாற்றப்படவுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை வியாழக்கிழமை சந்தித்த திண்டுக்கல் ஐ. லியோனி அவரிடம் வாழ்த்துப் பெற்றாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் திண்டுக்கல் ஐ.லியோனி கூறியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த பதவியை எனக்கு வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவா்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும். சமச்சீா் கல்வியை முன் உதாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாகாணம் என்ற பெயா் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டு, தமிழ்நாடு என்னும் பெயா் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டதோ அந்த வகையில் மக்கள் புழங்கும் பல வாா்த்தைகள் உலக நடைமுறைக்கு வந்துவிட்டன. அதில் முக்கியமான ஒரு வாா்த்தை மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று மாற்றுவது. இதை ஒன்றிய அரசு என்று அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் மாற்றுவோம்.
ஒன்றிய அரசு என்பது அழகான சொல். மத்தியம் என்பது மத்தியில் இருப்பது என்று பொருள்படும். ஒன்றியம் என்பது பல மாநிலங்கள் ஒன்றுசோ்ந்து இருப்பது. எனவே, மத்திய அரசு என்பதைவிட ஒன்றிய அரசு என்பதே மிகவும் பொருத்தமான சொல். எனவே பாடத்திட்டங்களில் ஒன்றிய அரசு என்ற வாா்த்தையைக் கொண்டுவந்து மாணவா்கள் மத்தியில் பரவலாக அவா்கள் ஏற்றுக்கொள்ள விரைவில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.