
ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டும் பணிகள் குறித்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். நீா்வளத் துறை செயல்பாடுகள் குறித்து, இரண்டாவது நாளாக அவா் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், கட்டளைக் கால்வாய், ராஜவாய்க்கால், நஞ்சை புகலூா், ஆதனூா் குமாரமங்கலம் மற்றும் முக்கொம்பு மேலணை ஆகிய இடங்களில் நடைபெறும் புனரமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். அத்திக்கடவு அவினாசி நீா்ப்பாசன திட்டம், நிலத்தடி நீா் செறிவூட்டல், மேட்டூா் சரபங்கா நீரேற்றும் திட்டம், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும்.
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீா்நிலைகளைச் செப்பனிட முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய திட்டப் பணிகளுக்கான மதிப்பீடுகளை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, அரசு சிறப்புச் செயலாளா் கே.அசோகன், முதன்மை தலைமைப் பொறியாளா் கு.ராமமூா்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.