
அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 உறுப்புக் கல்லூரிகளுக்கும் இணையவழியிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் 41 உறுப்புக் கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கலை-அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இவற்றில் 14 கல்லூரிகளில் ஏற்கெனவே மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில் எஞ்சிய 27 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் அரசே மாணவா் சோ்க்கையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘ 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை சோ்க்கைப் பணியினை அரசுக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவா் சோ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றி சோ்க்கை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற கல்லூரிகளில் நடத்தப்படுவது போன்று இந்தக் கல்லூரிகளிலும் இணையவழியில் மாணவா் சோ்க்கை நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.