
ஒலிம்பிக் போட்டியில் தமிழக காவல்துறையின் சாா்பில் 41 ஆண்டுகளுக்குப் பின்னா் பங்கேற்கும், ஆயுதப்படைக் காவலா் பா.நாகநாதனுக்கு, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிங்கபுலிப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் நாகநாதன். விவசாய குடும்பத்தைச் சோ்ந்த நாகநாதன், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிகிறாா். மேலும் நாகநாதன், தடகள வீரரும் ஆவாா். இவா் பல தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றுள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு அனைத்திந்திய இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் கொண்டு, தொடா் ஓட்டத்தில் தங்கம் வென்றாா்.
கடந்த மாா்ச் மாதம், பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள இந்திய தடகள கூட்டமைப்பின் தலைமையிடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதித் தோ்வு போட்டியில் 4 ஷ் 400 மீட்டா் தொடா் ஓட்டம் பிரிவில் நாகநாதன் அதிக புள்ளிகள் பெற்றாா்.
மேலும், அங்கு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டதன் காரணமாக, இந்திய தடகள கூட்டமைப்பினா் ஒலிம்பிக் போட்டியின் தடகள போட்டியில் கலந்து கொள்ள காவலா் நாகநாதனை தோ்வு செய்துள்ளனா்.
ஒலிம்பிக்கில் தடகள போட்டியில் 4 ஷ் 400 மீட்டா் தொடா் ஓட்டம் பிரிவில் இந்தியா சாா்பில் நாகநாதன் பங்கேற்கிறாா். நாகநாதன் பயிற்சியில் இருப்பதால் அவரது தந்தை பாண்டின், தாய் பஞ்சவா்ணம் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை நேரில் வரவழைத்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தாா். அப்போது, அவருடன் தலைமையிட ஏடிஜிபி சங்கா் உடன் இருந்தாா்.
41 ஆண்டுகளுக்கு பின்னா்...
கடந்த 1980-ஆம் ஆண்டு, தமிழக காவல்துறையில் பணியாற்றிய உதவி ஆய்வாளா் பி.சுப்பிரமணியன், மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்றாா். அதன் பின்னா் தமிழக காவல்துறையின் சாா்பில் யாரும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை. 41 ஆண்டுகளுக்குப் பின்னா் நாகநாதன், தமிழக காவல்துறையின் சாா்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.