மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்:  கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த நரேந்திர மோடி, அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக
மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்:  கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்:  கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
2 min read


மயிலாடுதுறை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த நரேந்திர மோடி, அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்களுக்கு முன்னர் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். ஏற்கெனவே உள்ள 12 மூத்த அமைச்சர்களை ராஜிநாமா செய்யவைத்து, முதுமுகங்களை சேர்த்தன் மூலம் தனது ஆட்சிக்கு புதுப்பொலிவு உருவானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர் முயல்கிறார். பல்வேறு துறைகளில்  மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதையே இந்த மாற்றம் எடுத்துக்காட்டுகிறது. கரோனாவில் மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்து, பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததன் காரணமாகவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். நரேந்திரமோடி அரசு திறம்பட செயல்பட்டிருந்தால் கரோனாவை முதல் அலையிலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம். 

நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. இதிலிருந்து மீள 6 அல்லது 7 ஆண்டுகள் ஆகும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், தொழில் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கித்துறை திவாலாகும் நிலைக்கு சென்றுள்ளது. புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் விவசாயிகளின் போராட்டம் 270 நாள்களைக் கடந்தும் அதற்கு இந்த அரசால் தீர்வு காண முடியவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டியவர் பிரதமர் நரேந்திர மோடியே தவிர, சில அமைச்சர்களை பொறுப்பு காட்டி அவர்களை மாற்றிவிட்டால் அவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள அவர் நினைக்கிறார். இதற்கு பதிலாக நரேந்திர மோடி பதவியை ராஜிநாமா செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.
 
தேசிய கல்விக்கொள்கை அமலாக்கப்படுவதன் முதல்கட்டமாக, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் இளங்கலை பட்டப்படிப்புக்கான வரலாற்று பாடங்களை திருத்துவதற்கான முன்மொழிவுகளை தந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் உண்மையான வரலாற்றையே திருத்தி எழுதி பொய்யான வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். 

பெட்ரோல், டீசல், கேஸ், யூரியா ஆகியவற்றுக்கு மானியம் தர மறுக்கும் மத்திய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மானியமான வழங்குகிறது. அவர்கள் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்கிறது. பாஜக ஆட்சியை பயன்படுத்திக்கொண்டு மேக்கேதாட்டுவில் அணைகட்டும் முயற்சியை எடியூரப்பா மேற்கொள்கிறார். இதுகுறித்து, தமிழக முதல்வர் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்து பேசியுள்ளார். மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். 

மத்திய அரசு தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை தந்துள்ளதால் மட்டும் தமிழகத்துக்கு நல்லது நடந்துவிடாது. ஏனெனில், மத்திய அரசு தமிழகத்துக்குத் தரவேண்டிய நிதி பங்கீட்டுத்தொகை, உள்ளாட்சி மன்றங்களுக்குத் தரவேண்டிய நிதி, தடுப்பூசி ஆகியவற்றை சரிவர வழங்கவில்லை. ஒளிப்பதிவு  சட்ட மசோதா கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது.

தமிழக அரசு பொறுப்பேற்ற 2 மாதங்களில் கரோனா தொற்றை திறம்பட எதிர்கொண்டுள்ளதோடு, ரூ.12ஆயிரம் கோடிக்கு சலுகைகளையும் அறிவித்துள்ளது. படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். இல்லையென்றால்;, அதனை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் கணிசமான மக்கள் கோயில் நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். இவர்களில் ஏழை மக்களுக்கு இலவசமாகவும், ஓரளவு வசதி படைத்தவர்களிடம் தவணை முறையில் பணத்தை வசூலித்துக்கொண்டு பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வற்புறுத்துவோம் என்றார்.

அப்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com