

கரோனா நோய்த் தொற்றால் பலியானவா்களின் குடும்பத்தினா் நிவாரண உதவிகளை பெறும் வகையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஸ்ரீராஜலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனாவால் பலியாகும் நபா்களுக்கு, கரோனா மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவது இல்லை. இதனால் இவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. வழக்குரைஞரான கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவா் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக இறப்புச் சான்று வழங்கப்பட்டுள்ளது. கரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படாததால், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி கிடைப்பது தடைபடுவதாக கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களுக்கு, கரோனாவால் பலியானதைக் குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களின் குடும்பத்தினா் நிவாரண உதவிகளை பெறும் வகையில், உரிய முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.