சொல்லின் செல்வர் சோ. சத்தியசீலன் காலமானார்

மூத்த தமிழறிஞரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமாகிய சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் (89), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன்
சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன்

மூத்த தமிழறிஞர்

திருச்சி: மூத்த தமிழறிஞரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமாகிய சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் (89), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானார்.

திருச்சியின் அடையாளமாகவும் விளங்கிய இவர், பள்ளி ஆசிரியராக தனது தமிழ் பணியை தொடங்கியவர். வள்ளலார் குறித்து ஆய்வில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்று, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். பின்னர், உருமு தனலட்சுமி கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணணையாளர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பல்லாயிரக்கணககான பட்டிமன்ற மேடைகளில் பேசியவர். 

செந்தமிழ் மாநாட்டின் பட்டிமன்ற நடுவராக இருந்தவர். அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், பாரீஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் பணியாற்றியவர். வள்ளலார் குறித்து இவர் பேசிய தொகுப்பு 6 ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளன. 

இதுமட்டுமின்றி, ஆங்கிலத்தில் மூன்று நூல்கள், தமிழ் மொழியில் 40 நூல்களை எழுதியுள்ளார். அவர்கள் இப்படி?, நீங்கள் எப்படி?, இலக்கியம் பேசும் இலக்கியம் (தன்வரலாறு), திருக்குறள் சிந்தனை முழக்கம், கண்டறியாதன கண்டேன், அழைக்கிறது அமெரிக்கா ஆகிய நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பல்வேறு முனைவர் பட்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர்.

பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும், பாடத் திட்டக் குழு உறுப்பினராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக திட்டக் குழு உறுப்பினரகாவும் பணியாற்றியவர். திருச்சி மாவட்ட நலப்பணிகள் குழு, கி.ஆ.பெ. விசுவாதம் பள்ளி, உருமு தனலட்சுமி பள்ளி உள்ளிட்டவற்றில் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர். குன்றக்குடி அடிகளாரிடம் நாவுக்கரசர் பட்டத்தை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளை பெற்றவர். மறைந்த முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் நட்பு பாரட்டியவர். இலக்கிய அமைப்புகளிடம் இருந்து கம்பக் காவலர் விருது, கம்பன் விருது, சடையப்ப வள்ளல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். 

எண்.53, திருச்சி சேதுராமன் பிள்ளை காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், வயது முதிர்வால் உடல் நலமின்றி  வெள்ளிக்கிழமை இரவு காலமானார். 

இவருக்கு, மனைவி தனபாக்கியம், மகள் சித்ரா மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 

தொடர்புக்கு: 98424-10733, 96554-97862.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com