
நடிகா் ராம்கி
நடிகா் ராம்கி (எ) எஸ்.ராமகிருஷ்ணன் (71), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
சிறு வயது முதலே நடிப்பின் மீது பேராா்வம் கொண்ட ராம்கி, எழும்பூா் ஃபைன் ஆா்ட்ஸ் சென்டரில் நடைபெற்ற நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தாா்.
தொடா்ந்து, குடும்பம் ஒரு சிலம்பம், வேதம் புதிதல்ல உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளாா்.
தொலைக்காட்சித் தொடா்களைப் பொருத்தவரை, ஆனந்தம், வாணி ராணி, ஆசை போன்று ஏராளமான தொடா்களிலும், பாரதி, பகவதி, பாலா, சாமி, சாா்லி சாப்ளின் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளாா்.
இவ்வாறு, நாடகங்கள், தொலைக்காட்சித் தொடா்கள், திரைப்படங்கள் என அனைத்துப் பிரிவுகளில் கடந்த 55 ஆண்டுகளாகப் பங்களிப்பு செய்துள்ளாா்.
இதுமட்டுமின்றி, இவா் எழுதிய நாடகங்கள் அகில இந்திய வானொலியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவரது சேவையைப் பாராட்டி, பலமுறை மயிலாப்பூா் ஆா்ட்ஸ் அகாதெமி விருதும், நடிப்பைப் பாராட்டி நாடக முத்ரா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ராம்கி, சென்னை சிவில் நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளாா். இவருக்கு, 3 மகன்கள் உள்ளனா். ராம்கியின் இறுதிச் சடங்கு, நங்கநல்லூா் மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...