
தொல்.திருமாவளவன் எம்.பி.
பாஜக தலைவராக இருந்த எல். முருகனை நீக்கியது தவறு, அது அவருக்கு செய்த அவமதிப்பு என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். மேக்கேதாட்டுவில் அணை கட்டக் கூடாது. அது தமிழகத்தின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் அதனால் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். 10 நாட்களுக்கு முன்பே தமிழக முதல்வருக்கு இந்த வேண்டுகோளை நான் வைத்தேன். தற்போதைய அவருடைய அறிவிப்பு நம்பிக்கையையும், ஆறுதலையும் அளிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கின்றனர். இந்த விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிகளுடன் இணைந்து மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து போராட்டம் நடத்தினோம். மத்திய அரசின் வறட்டு பிடிவாதத்தால் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மோடி அரசின் அணுகுமுறைதான் இதற்கு காரணம். இந்த வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும். பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. கொங்கு நாட்டை பிரிப்பது, மதம், சாதியின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உக்தி. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உக்திகளை செய்து வருகிறது. இப்படித்தான் ஜம்மு காஷ்மீரை மூன்றாகப் பிரித்தது.
வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்திற்காக துண்டு போட்டு வருகின்றது. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்திலும் இதுபோன்ற முயற்சியை செய்து பார்க்க உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வியுற்றது.
பாஜக தலைவராக இருந்த முருகனை நீக்கியது தவறு. அது அவருக்கு செய்த அவமதிப்பு. அவரால்தான் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...