
தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
"இந்த மண் மற்றும் மண்ணின் பெருமைகளைப் பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து காப்பாற்றும்.
தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த காலகட்டத்திலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விட்டுக் கொடுக்காது.
நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும்.
தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது. அந்தக் கனவு எல்லாம் நிறைவேறாது, ஆகையால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
அரசியல் சட்டத்தில் மத்திய அரசினை ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால் ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு இல்லை, நாட்டுக்கு எதிரான ஒன்றுமில்லை.
தமிழகம் பாதுகாப்பான ஆட்சியில் இருக்கிறது. ஆகையால் தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
தமிழகத்தில் மேற்கு மண்டலம் கொங்கு நாடு என தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி பெருமளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...