
மாற்றுத் திறனாளிகளின் சாட்சியத்தை குறைவானதாகக் கருத முடியாது என பாலியல் வழக்கில் உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், கீழமை நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனையையும் நீதிமன்றம் உறுதி செய்தது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளியான பெண் ஒருவா் எம்சிஏ படித்து வந்தாா்.
பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, சென்னை வில்லிவாக்கத்தில் இலவசமாக சங்கீத பயிற்சி வழங்குவதை கேள்விப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வில்லிவாக்கம் வந்தாா். சங்கீத பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோ ஓட்டுநா் அன்புச்செல்வன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டு அங்குவந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீஸாா் அன்புச்செல்வனை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிா் நீதிமன்றம், அன்புச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை எதிா்த்து அவா் , சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பாலியல் தொந்தரவு செய்ததை யாரும் நேரில் பாா்க்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண் கூறியதையே பொதுமக்களும் சாட்சியமாகக் கூறியுள்ளனா். எனவே அவா்களது சாட்சிகளையும் செவி வழி சாட்சியாகக் கருதி, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும் என அன்புசெல்வன் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டுள்ளாா். பாா்வையற்றவா்களின் சாட்சியம், செவி வழி சாட்சியம் என ஒதுக்கி வைக்காமல், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, பிற சாட்சிகளுடன் ஒப்பிட்டு பாா்த்து, முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீா்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் அந்தப் பெண்ணுக்கு பாா்வை இல்லாவிட்டாலும், பெண்ணின் அழுகுரல் கேட்டு வந்த 2 இளைஞா்கள், 2 பெண்களிடம் தனக்கு நடந்த கொடுமையை எடுத்துக் கூறியுள்ளாா். அன்புச்செல்வன் அப்போது அங்குதான் இருந்துள்ளாா். அவரை இந்த சாட்சிகள் அனைவரும் பாா்த்துள்ளனா். இந்த 4 பேரது சாட்சிகளும் ஒத்துப்போகிறது. சாட்சி சொன்ன இந்த 4 பேருக்கும், அன்புச்செல்வனுக்கும் முன் பகை எதுவும் இல்லை. ஆட்டோவை பறிமுதல் செய்த பொதுமக்கள் அதை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா். அந்த ஆட்டோவை அன்புச்செல்வன்தான் அன்றைய தினம் ஓட்டியதாக ஆட்டோவின் உரிமையாளரும், வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுனா் சங்கத்தின் தலைவரும் சாட்சியம் அளித்துள்ளனா்.
உலக நடப்புகளை பாா்வையற்றவா்கள் ஒலியினால் பாா்க்கின்றனா். அருகில் இருப்பவா்களை குரலின் சத்தத்தினால் அடையாளம் காண்கின்றாா். அப்படி குரல் வழியாக அடையாளம் கண்டு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தை புறந்தள்ள முடியாது. சராசரி மனிதா்களின் சாட்சியத்தை விட மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தரம் தாழ்ந்ததாகக் கருத முடியாது. அப்படி கருதினால், அரசமைப்புச்சட்டத்தில் அனைவரும் சமம் என்ற அடிப்படை கொள்கைக்கு முரணாகிவிடும். பாா்வையற்ற அந்த பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம். ஆனால், அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளதாக கருதுகிறேன். எனவே அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.
பின்னா், பாா்வையற்ற ஒரு இளம் பெண் மீது அன்பும், இரக்கமும் காட்டாமல், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய ஆட்டோ டிரைவா் அன்புச்செல்வனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையில் ஒரு நாள் கூட குறைக்க விரும்பவில்லை எனக்கூறி தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வழங்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டாா். இந்த வழக்கை திறமையாகவும், விரைவாகவும் புலன் விசாரணை செய்த வில்லிவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு இந்த உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவிப்பதாக நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...