நீட் தேர்வின் தாக்கம்: நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல்

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கியது.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த நீதிபதி ஏ.கே.ராஜன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த நீதிபதி ஏ.கே.ராஜன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு.
Published on
Updated on
1 min read


சென்னை: நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கியது. மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே கருத்துகளைத் தொகுத்துள்ளதாக குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.
ராஜன் தெரிவித்தார்.
நீட் தேர்வால் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழுவில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவகர் நேசன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், சுகாதாரத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்க கூடுதல் இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
86,000 பேர் மனுக்கள்: நீட் தேர்வின் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பொது மக்களிடம் இருந்து 86,342 மனுக்கள் பெறப்பட்டன. ஆன்-லைன் மூலமாகவும் மனுக்கள் வரப்பெற்றன. கடந்த ஜூன் 10-ஆம் தேதி குழு அமைக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காரணமாக அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது செல்லும் என உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்புக் கூறியது. இதைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கியது.
அப்போது, குழுவின் உறுப்பினர்களுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் தனது குழு உறுப்பினர்களுடன் இணைந்து முதல்வரிடம் அறிக்கையை வழங்கினார் நீதிபதி ஏ.கே.ராஜன். 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை குறித்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
பெரும்பான்மையானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்துக் கூறியுள்ளனர். 86,000 பேர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை, நீட் தேர்வுக்கு முன்பும், பின்பும் எப்படி இருந்தன என்பன குறித்தெல்லாம் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு முடிவினை அறிவிக்கும். எங்களிடம் தெரிவித்த கருத்துகளை மட்டுமே பதிவு செய்துள்ளோம். புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் விவரங்களைத் திரட்டித் தந்துள்ளோம். தனிப்பட்ட முறையில் நாங்களாக எந்த விஷயங்களையும் குறிப்பிடவில்லை.
நீட் தேர்வு காரணமாக, பொருளாதாரம், உளவியல், சமூகநீதி, சட்டம் உள்பட பல்வேறு வகையான பிரச்னைகள் இருப்பதை கருத்துத் தெரிவித்தவர்களின் மூலமாக அறிய முடிகிறது. முழு அளவில் விவரங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது திருப்தி அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com