
காங்கயம் அவலம்: 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 12 ஆண்டுகளாக மனு (கோப்பிலிருந்து)
காங்கயம்: வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 20 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டது. அந்த மனைகளை தகுதியுள்ள, சொந்த வீடு இல்லாத நபர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா, திங்கள்கிழமை காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் ஒன்றியம், உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 61 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இந்தக் 61 நபர்களில், வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப் புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டு அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை காங்கயம் தனி வட்டாட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, 61 பட்டாக்களில் 20 நபர்கள் சொந்தமாக வீடு வைத்திருந்து, போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றது தெரிய வந்தது. இதன் பின்னர், அந்த 20 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குறுதியளித்த பின்னரும், கடந்த 12 வருடங்களாக மேற்கண்ட காலியாக உள்ள 20 வீட்டுமனைப் பட்டாக்களை சொந்த வீடு இல்லாமல், வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த 20 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே, காங்கயம் வட்டாட்சியர் இப்பிரச்னையில் நேரடியாக விசாரணை நடத்தி, காலியாக உள்ள 20 வீட்டுமனைப் பட்டாக்களை உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப் புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத தலித் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.