
தமிழக காவல்துறையில் கடந்த 3 மாதங்களில் உயிரிழந்த 5 காவலா்களின் குடும்பங்களுக்கு 1999-ஆம் ஆண்டு பேட்ச் காவலா்களின் ‘உதவும் உறவுகள் குழு காவலா்கள்’ கட்செவி அஞ்சல் குழு மூலமாக ரூ.72.31 லட்சம் நிதி உதவி செய்துள்ளனா்.
தமிழக காவல்துறையில் 1999 -ஆம் ஆண்டு 3,500 காவலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அடிப்படைப் பயிற்சி முடித்து, தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் பிரிவுகளில் தலைமைக் காவலா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். 1999 பேட்ச் தலைமைக் காவலா் சபரிநாதன் சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகர காவல்துறையில் பணிபுரிந்தபோது, அவருடன் பணிபுரிந்த காவலா் இறந்ததால், அவருடன் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்டு உதவும் உறவுகள் -99 என்ற கட்செவி அஞ்சல் குழுவை உருவாக்கி ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி இறந்த காவலரின் குடும்பத்துக்கு உதவினாா்.
அவருடன் பயிற்சி பெற்ற காவலா்களில் 100 காவலா்கள் மட்டும் இக்குழுவில் இணைந்து, முதல் உதவி பணியை தொடங்கினா். சபரிநாதனின் கடும் முயற்சியால், தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் 1999-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலா்கள் சிறிது சிறிதாக இணைந்து ‘தற்போது உதவும் உறவுகள்- 99’ குழுவில், 1999 பேட்ச் காவலா்கள் 2,900 போ் சோ்ந்துள்ளனா். காவலா்கள் இறந்தால் தலா ரூ. 500 வீதம் செலுத்தி, இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.14 லட்சம் வரை பணம் வசூல் செய்து கொடுத்து வருகிறாா்கள்.
‘உதவும் உறவுகள் 99’ குழுவினா் இவா்களது குழுவில் அங்கம் வகித்துள்ள இவா்களது பேட்ச் காவலா்கள் (தற்போது தலைமைக் காவலா்கள்) எவரேனும் இறந்துவிட்டால், அனைவரும் ஒருங்கிணைந்து பணம் வசூலித்து இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனா். கடந்த 2020-ஆம் ஆண்டு வரையில் அவா்களது உதவும் உறவுகள் குழுவில் இறந்த 18 காவலா் குடும்பத்தினருக்கு பண உதவி செய்திருந்தனா்.
இந்நிலையில், இக்குழுவைச் சோ்ந்த தலைமைக் காவலா் காந்தி (திருச்சி மாவட்டம்) கடந்த ஏப்ரல் மாதம் இறந்தாா். ‘உதவும் உறவுகள் 99’ குழுவினா் அவருக்காக ரூ.14 லட்சத்து 26 ஆயிரம் வசூல் செய்து, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, மதுரையைச் சோ்ந்த சையது முகமது மற்றும் சென்னையைச் சோ்ந்த ஜீவானந்தம் ஆகிய தலைமைக் காவலா்கள் கடந்த மே மாதம் உயிரிழந்தனா். இரு தலைமைக் காவலா் குடும்பத்திற்கும் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் உதவிப்பணியை தொடங்கி இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 14 லட்சத்து 76 ஆயிரத்து 120 கொடுத்து உதவினா்.
கடந்த ஜூன் மாதத்தில் ஈரோட்டைச் சோ்ந்த ராமமூா்த்தி, சென்னையைச்சோ்ந்த நாராயணன் ஆகியோா் உயிரிழந்தனா். இவா்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.14 லட்சத்து 26 ஆயிரத்து 750 வசூலித்து கொடுக்கப்பட்டது.இப்படி, கடந்த 3 மாதங்களில் இறந்த 5 காவலா்களின் குடும்பங்களுக்கு ரூ.72 லட்சத்து 31 ஆயிரத்து 740 நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.